சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

Mahendran

செவ்வாய், 8 ஜூலை 2025 (15:11 IST)
சென்னை அருகே சாலையில் திடீரென ஒரு பெரிய பிளவு ஏற்பட்டதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். "பூமி பிளந்தது போல் சாலை பிளந்து உள்ளது," என அந்த பகுதி மக்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை அருகே பெருங்குடி ரயில்வே நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த பகுதியில் உள்ள ஒரு முக்கிய சாலையின் நடுவே திடீரென பிளவு ஏற்பட்டுள்ளது. சாலையின் நடுவே சுமார் 150 அடி நீளத்திற்கு பிளவு ஏற்பட்டதை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர். "சாலையின் நடுவே மிகப்பெரிய பிளவு ஏற்பட்டதை பார்க்கும்போது பூகம்பம் தான் வந்துவிட்டதோ என நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்," என அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், பூகம்பம் எதுவும் வரவில்லை என்பதை உறுதி செய்த அதிகாரிகள், இந்தப் பிளவு குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
 
சாலையின் இரு பக்கமும் மிக உயர்ந்த கட்டிடங்கள் இருப்பதால், கட்டிடத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், மக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டாம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்