விண்வெளி வீரர்களை தாங்கி வந்த டிராகன் விண்கலம், பசிபிக் பெருங்கடலில், கலிஃபோர்னியா கடற்கரைக்கு அருகே பத்திரமாக தரையிறங்கியது. விண்கலத்தை மீட்க அமெரிக்க கடற்படையும், விமானப் படையும் துரிதமாகச் செயல்பட்டு வருகின்றன.
சுபான்ஷு சுக்லா உட்பட குழுவினர் ஜூன் 26 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து, சுமார் 433 மணிநேரம் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் சுபான்ஷு சுக்லா, வெந்தயம் மற்றும் பாசிப்பயறு விதைகளை முளைக்க செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக செய்து காட்டினார். இந்த விதைகள் பூமிக்கு கொண்டுவரப்பட்டு மேலதிக ஆய்வுகள் செய்யப்படும். இந்தப் பயணத்தின்போது, குழுவினர் பூமியை 288 முறை சுற்றி வந்து, சுமார் 122.31 லட்சம் கிலோமீட்டர் பயணிம் செய்துள்ளனர்.
சுக்லா உட்பட 4 வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, ஏழு நாட்கள் சிறப்பு சிகிச்சை மையத்தில் தங்குவார்கள். 2027ஆம் ஆண்டு இஸ்ரோவின் மனித விண்வெளி பயணத் திட்டமான ககன்யான் திட்டத்திற்கு அனுபவ ரீதியாக உதவும் வகையில், சுக்லாவின் இந்த விண்வெளி நிலைய பயணத்திற்காக சுமார் ரூ.550 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது