பெங்களூரில் மக்கள் சேர்ந்து பிக்காச்சு என்ற நாய்க்கு கல்வெட்டு அமைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதுமே நாய் மீது பிரியம் கொண்ட மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். முதன்முறையாக ஒரு நாய்க்கு சிலை வைத்தது முதல் அது திரைப்படம் வரையிலும் பிரபலமானது என்றால் அது ஜப்பானை சேர்ந்த ஹச்சிகோ என்ற நாய்தான். தனது எஜமானரை அலுவலகத்திற்கு தினமும் ரயில் நிலையம் வரை சென்று விட்டு வரும் ஹச்சிகோ. ஒரு நாள் அலுவலகம் சென்ற அவர் இறந்துவிட அது தெரியாமல் அவர் வருவார் என்று அந்த ரயில் நிலையத்திலேயே ஆண்டு கணக்காக காத்திருந்து உயிரை விட்டது ஹச்சிகோ. அதற்கு ஜப்பானிய மக்கள் சிலை வைத்துள்ள நிலையில், அதன் கதையும் ஜப்பான், ஹாலிவுட்டில் படங்களாக வெளியானது.
அப்படியானதொரு பாசமான நாய் இறந்த சம்பவம் பெங்களூரிலும் நடந்துள்ளது. பெங்களூரில் உள்ள ஜே.பி.நகர் பகுதியில் வளர்ந்து வந்த தெருநாய் ஒன்று அந்த பகுதி மக்களிடம் மிகவும் பாசமாக பழகி வந்துள்ளது. யாரோ ஒரு போக்கிமான் ரசிகர் அதற்கு பிக்காச்சு (Pikachu) என பெயர் வைத்துள்ளார். ஜே.பி.நகர் வாசிகளின் தோழனாய் பழகி வந்த பிக்காச்சு சமீபத்தில் ஒரு விபத்தில் பரிதாபமாக பலியானது.
அதை எண்ணி வருந்திய ஜே.பி.நகர் மக்கள் பிக்காச்சு நினைவாக அப்பகுதியில் அதன் அழகிய முகம் பதித்த ஒரு கல்வெட்டையும், நாய்கள் மற்ற பிற விலங்குகள், பறவைகள் தண்ணீர் அருந்த உதவும் வகையில் சிறு குடிநீர் தொட்டியையும் அமைத்துள்ளனர். பெங்களூரில் தெரு நாய்கள் அதிகமாக இருப்பதை பலரும் ஒரு குறையாக சொல்லி வரும் அதே நேரத்தில் தெரு நாய் ஒன்றிற்கு மக்கள் பாசமாக கல்வெட்டு வைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K