மாதத்திற்கு ₹10,000 சம்பளத்தில் சமையல்காரராக பணியாற்றும் ரவீந்திர சிங் சௌஹானின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் ₹40 கோடிக்கும் அதிகமான தொகை பரிவர்த்தனை நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2017-ல் மெஹ்ரா சுங்கச்சாவடியில் வேலை செய்தபோது, சஷி பூஷன் ராய் என்ற மேற்பார்வையாளருடன் ரவீந்திராவுக்குப் பழக்கம் ஏற்பட்டது. 2019-ல் ராய், ரவீந்திராவை டெல்லிக்கு அழைத்து சென்று, அவரது வருங்கால வைப்பு நிதி கணக்குக்காக ஒரு வங்கிக் கணக்கைத் திறந்திருக்கிறார். அதன் பிறகு, வேலை நிமித்தமாக புனே சென்ற ரவீந்திரா, அந்தக் கணக்கை பற்றி முற்றிலும் மறந்துவிட்டார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ரவீந்திராவின் சொந்த ஊரான பிண்டில் உள்ள அவரது வீட்டிற்கு ஆங்கிலத்தில் ஒரு நோட்டீஸ் வந்தது. குடும்பத்தினருக்கு என்னவென்று புரியாத நிலையில், ஜூலை மாதம் இரண்டாவது நோட்டீஸ் வந்த பிறகு, ரவீந்திராவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக புனே வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்த ரவீந்திரா, ஒரு வழக்கறிஞரை அணுகியபோதுதான், அவரது பெயரில் ₹40.18 கோடி பரிவர்த்தனைகள் நடந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது.
அவரது பான் மற்றும் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி, 'ஷௌரியா இன்டர்நேஷனல் டிரேடர்ஸ்' என்ற நிறுவனமும் தொடங்கப்பட்டு, அதன் மூலம் 2023 வரை இந்த மோசடி நடந்திருக்கிறது. தற்போது பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டாலும், ₹12.5 லட்சம் அந்த கணக்கில் இன்றும் உள்ளது.