திரைப்பட நடிகராகவும், சமையற் கலைஞராகவும் அறியப்படுபவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஜாய் கிரிசில்டா என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரங்கராஜுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தன் குழந்தைக்கு நீதி வேண்டும் என்றும் 10 நாட்களுக்கு முன்னர் ஜாய் கமிஷனர் அலுவகத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த புகாரின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தற்போது எக்ஸ் தளத்தில் ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களையும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் “நான் மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து 10 நாட்கள் ஆகிறது. நான் என் பிரசவ காலத்தை நெருங்கியும், என் பார்வையற்ற தாயோடு சென்று கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றேன். ஆனால் அந்த புகாரின் நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால் ரங்கராஜ் வி ஐ பி போல நடத்தப்படுகிறார். அப்பா ( முதல்வர் மு க ஸ்டாலின்) உங்கள் ஆட்சி என்னை போன்ற ஆதரவற்ற அபலைப் பெண்களால் நம்பப்படுகிறது. நான் உங்களைக் கைகூப்பி மன்றாடிக் கேட்கிறேன். இந்த விஷயத்தில் தலையிட்டு எனக்கு நீதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன். பிரபலமாக இருந்தால் ஒரு பெண்ணை ஏமாற்றிவிட்டு எந்த தண்டனையும் பெறாமல் சுற்றித் திரிய முடியுமா?. எனக்கும் பிறக்காத என் குழந்தைக்கும் நீதி வேண்டும்” எனக் கூறியுள்ளார்.