லேண்டர் விக்ரம் செயல்படுமா? அதில் இருந்து சிக்னல் கிடைக்குமா என சந்திரயான் - 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பதில் அளித்துள்ளார்.
நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் விக்ரம், நிலவின் மேற்பரப்பிற்கு 2.1 கிமீ தொலைவில் இருந்த போது தகவல் தொடர்பை இழந்தது.
இதையடுத்து ஆப்பிரடரை வைத்து லேண்டர் விக்ரம் எங்கு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனிடம் இருந்து இன்னும் தொடர்பை பெற முடியவில்லை என இஸ்ரோ இன்று காலை அறிவித்தது.
இந்நிலையில், சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை லேண்டர் விக்ரம் குறித்து தெரிவித்தது பின்வருமாறு... 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கி அடுத்த 14 நாட்கள் செயல்படும் வகையில் அனுப்பி வைக்கப்பட்ட விக்ரம் மற்றும் பிரக்யான் விண்கலங்கள், இன்னும், 11 நாட்களுக்கு மட்டுமே துடிப்புடன் இயங்கும்.
இதனால் அதற்குள் விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை புதுப்பிக்க இஸ்ரோ தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளது. 5 முதல் 10 நிமிடங்கள் வரை லேண்டர் விக்ரமுடனான தகவல் தொடர்பை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.