எங்கள் கூட்டணிக்கு வைகோ வந்தால் அவருக்கு எம்பி பதவி உறுதி: மத்திய அமைச்சர்

Siva

வியாழன், 24 ஜூலை 2025 (16:29 IST)
மாநிலங்களவை எம்.பி.க்களான வைகோ உள்ளிட்ட ஆறு பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தனது இறுதி உரையை ஆற்றிய வைகோ, ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று கூறி, தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 
 
இதற்கிடையே, பா.ஜ.க. கூட்டணியில் உள்ள இந்திய குடியரசுக் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அட்வாலே, வைகோவுக்கு விடுத்த வெளிப்படையான அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அட்வாலே பேசுகையில், "வைகோ பா.ஜ.க. கூட்டணிக்கு வந்தால் மீண்டும் எம்.பி. ஆகலாம். அவரை வழி அனுப்பி வைக்க நாங்கள் விரும்பவில்லை. அவரால் மாநிலங்களவைக்கு மீண்டும் வர முடியும். அவர் எங்களோடு கூட்டணி அமைத்தால் அவருக்கு எம்.பி. பதவி உறுதி" என்று பகிரங்கமாக தெரிவித்தார்.
 
மேலும், "நாட்டுக்காகவும் தமிழகத்திற்காகவும் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, அவரை வழி அனுப்பி வைக்க எனக்கு விருப்பமில்லை" என்றும் அட்வாலே கூறினார்.
 
அட்வாலேவின் இந்த அழைப்பு, பா.ஜ.க. கூட்டணிக்கு வைகோ  செல்வாரா? என்ற கேள்வியை வலுவாக எழுப்பியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இருந்து தனது ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடையும் நிலையில், பா.ஜ.க.வின் இந்த அழைப்பை வைகோ எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது தமிழக அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.  
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்