அரிசி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அரிசி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது பாரத் அரிசி என்ற பெயரில் ஒரு கிலோ 29 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய உணவுத்துறை செயலாளர் செய்தியாளர்களிடம் கூறும்போது கடந்த ஓராண்டில் அரிசியின் சில்லறை மற்றும் மொத்த விலை 15% அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்த இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் பாரத் அரிசி என்ற பெயரில் ஒரு கிலோ 29 ரூபாய்க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் ஐந்து கிலோ முதல் 10 கிலோ வரையிலான பைகளில் இந்த அரிசி கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே பாரத் ஆட்டா என்ற பெயரில் கோதுமை ஒரு கிலோ ரூ.27.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.