கார்த்திக் சிதம்பரத்திடம் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை; சிபிஐ கவலை
வியாழன், 1 மார்ச் 2018 (15:18 IST)
ஒரு நாள் காவலில் கார்த்திக் சிதம்பரத்திடம் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை என்றும் மேலும் 14 நாட்கள் காவல் தேவை என்றும் சிபிஐ டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கார்த்திக் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதையடுத்து சென்னையில் நேற்று சிபிஐ கார்த்திக் சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தது.
கைது செய்த கார்த்திக் சிதம்பரத்தை சிபிஐ டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், கார்த்திக் சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசரரிக்க சிபிஐக்கு நேற்று உத்தரவிட்டது. ஒருநாள் கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது கார்த்திக் சிதம்பரம் மீண்டும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்:
கார்த்திக் சிதம்பரத்திடம் ஒருநாளில் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை. இதனால் விசாரிக்க மேலும் 14 நாட்கள் காவல் தேவை. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். ஆனால் அவர் நழுவல் போக்கு காட்டுவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கார்த்திக் சிதம்பரம் நேற்றிரவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருதரப்பு வாதமும் நடைபெற்று வருவதால் சிபிஐ, மேலும் கார்த்திக் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த 2 வாரம் காவல் தேவை என்பதை வலுவாக வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், காத்திக் சிதம்பரத்தை காண பா.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரம் ஆகியோர் டெல்லி பாட்டியா நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளார்.