கார்த்திக் சிதம்பரம் கைது ; ரியாக்ஷன் காட்டாத திமுக : காங்கிரசுடன் விரிசல்?
வியாழன், 1 மார்ச் 2018 (08:59 IST)
முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலையில், திமுக-காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கார்த்திக் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவரை சிபிஐ நேற்று அதிரடியாக கைது செய்தது.
இந்நிலையில், காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக இதுவரைக்கும் எந்த ரியாக்ஷனும் காட்டவே இல்லை. அதோடு, திமுக ஆதரவு தொலைக்காட்சியிலும் கார்த்திக் சிதம்பரம் தொடர்பான செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தன.
அதற்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதான். 2ஜி வழக்கில் ராசா மற்றும் கனிமொழியை சிக்க வைத்ததற்கு பின்னால் ப.சிதம்பரமே இருந்தார் என்பதே திமுகவின் குற்றச்சாட்டு. அதனால்தான், ப.சிதம்பரத்தின் தாய் மரணமடைந்து போது கூட, திமுக தரப்பில் இருந்தும் யாரும் செல்லவில்லை.
ஆனாலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்தது. அப்போது, வெற்றி பெற முடியாத சில தொகுதிகளையும் நச்சரித்து வாங்கியது காங்கிரஸ். அதனாலேயே, நம்மால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது என நம்புகிறது ஸ்டாலின் தரப்பு.
மேலும், 2ஜி வழக்கில் விடுதலையான பின் ஆர்.ராசா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த போது, ப.சிதம்பரமே தன்னை தவறாக வழி நடத்தினார் என ராசாவிடம் மன்மோகன் சிங் கூறியதாக அப்போதே செய்திகள் வெளியானது. அதை இலை மறைவு காய் மறைவாக ராசா ஊடகங்களிலும் வெளிப்படுத்தினார்.
எனவே, அந்த கோபங்களால்தான், கார்த்திக் சிதம்பரத்தின் கைதுக்கு ஸ்டாலின் தரப்பு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லையாம். மேலும், காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் முடிவில் ஸ்டாலின் இருப்பதாகவும் திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. எனவே கார்த்திக் சிதம்பரத்தின் கைது விவகாரம் திமுக-காங்கிரஸ் உறவுக்கிடையே விரிசலை ஏற்படுத்திருப்பதாக கூறப்படுகிறது.