என் நண்பன் சுடப்பட்டது மோசமான செயல்! - ட்ரம்ப் சுடப்பட்டது குறித்து பிரதமர் மோடி ஆதங்கம்!

Prasanth Karthick
ஞாயிறு, 14 ஜூலை 2024 (09:13 IST)

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டித்து பதிவிட்டுள்ளார்.
 

அமெரிக்காவில் டிசம்பர் மாதம் அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் களம் காண்கிறார். இதற்காக அமெரிக்க மாகாணங்கள் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் நேற்று பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் மீது திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் துப்பாக்கி குண்டுகள் காதை உரசி சென்ற நிலையில் தப்பித்த டொனால்ட் ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மர்ம நபர் நடத்திய துப்பாக்கி தாக்குதலால் பிரச்சாரத்திற்கு வந்த பொதுமக்களில் ஒருவர் பலியானார். அந்த மர்ம நபரை போலீஸ் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ட்ரம்ப் மீதான துப்பாக்கிசூட்டிற்கு அவரது நண்பரும், இந்திய பிரதமருமான நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “எனது நண்பரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை. சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் மீதான இந்த தாக்குதலுக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளிட்ட பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்