’செல்பி எடுக்கலாம் வாங்க’ நைஸாக கணவனை ஆற்றில் தள்ளி கொல்ல முயற்சி!? உஷாரான கணவன்!

Prasanth K

ஞாயிறு, 13 ஜூலை 2025 (10:58 IST)

கர்நாடகாவில் திருமணமான புதுமண தம்பதிகள் ஆற்றில் செல்பி எடுக்க சென்றபோது மனைவி, கணவனை ஆற்றில் தள்ளிக் கொல்ல முயன்றதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேகாலயா ஹனிமூன் சென்ற புதுமண ஜோடிகளில் கணவன் கொல்லப்பட்டதும், அதை மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டதும் தெரிய வந்து தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் புதுமண தம்பதிகள் இடையேயான கொலை சம்பவம் ஆங்காங்கே நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அப்படியான சம்பவம் ஒன்று கர்நாடகாவில் நடந்துள்ளது.

 

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் அருகே உள்ள சக்திநகரை சேர்ந்த தாதப்பா என்பவருக்கும், வடகரே கிராமத்தை சேர்ந்த கந்தம்மா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்கள் முன்னதாக திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆன சில நாட்கள் கழித்து இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையும், மனக்கசப்பும் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

நேற்று காலை அவர்கள் ராய்ச்சூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா நதிக்கு சென்று இயற்கை காட்சிகளை ரசித்து பொழுதை கழித்துள்ளனர். அப்போது கிருஷ்ணா ஆற்றுப்பாலத்தில் இருவரும் சேர்ந்து செல்பி எடுத்துள்ளனர். பின்னர் தனித்தனியாக நின்று போட்டோ எடுத்துள்ளனர். அப்போது தாதப்பா ஆற்றுப்பாலத்தின் கட்டையின் மீது போஸ் கொடுத்து நின்றபோது கந்தம்மா அவரை ஆற்றில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

 

ஆற்றில் வெள்ளம் பாய்ந்து சென்றுக் கொண்டிருந்த நிலையில், ஆற்றுக்குள் விழுந்த தாதப்பா நீச்சல் தெரிந்ததால் எப்படியோ தப்பிச் சென்று ஆற்றின் நடுவில் இருந்த பாறை ஒன்றை பற்றிக் கொண்டு உதவி கேட்டு கத்தியுள்ளார். உடனடியாக அங்கு திரண்ட சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் கயிறை வீசி தாதப்பாவை பத்திரமாக மீட்டனர்.

 

கரைக்கு வந்ததும் தாதப்பா, தன்னை தன் மனைவி கந்தம்மாதான் தள்ளிவிட்டு கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டியதுடன், மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிய வந்துள்ளது. அவர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரித்த நிலையில், தன்னை தன் மனைவி கொலை செய்ய முயன்றதாக தாதப்பா புகார் அளித்துள்ளார். 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்