கடந்த 1998 ஆம் ஆண்டு, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கோவையில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது, அவர் பேச இருந்த மேடை அருகே திடீரென குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து, 14 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் மொத்தம் 58 பேர் பரிதாபமாக பலியாகினர், 231 பேர் படுகாயம் அடைந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்பை அடுத்து, நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர், இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த தொடர் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான 'டெய்லர் ராஜா' என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலத்தில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.