ஆந்திரப் பிரதேசம், அனந்தபூர் தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் டகுபதி வெங்கடேஸ்வர பிரசாத், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை அவதூறாக பேசி, அவரது சமீபத்திய திரைப்படமான "வார் 2" படத்தை புறக்கணிக்க அழைப்பு விடுத்ததாக கூறப்படும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த ஆடியோவில், "வார் 2" திரைப்படம் வெளியாகும் போது, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வர பிரசாத், ஒரு ரசிகரிடம் பேசுவது போன்ற உரையாடல் உள்ளது. அந்த ஆடியோவில், "இந்தச் சினிமா ஓடாது. நான் சொன்னால் சினிமா ஓடாது. நான் அனந்தபூர் எம்.எல்.ஏ." என்று பிரசாத்தின் குரல் போன்ற ஒரு குரல் பேசியுள்ளது. அதற்கு மறுமுனையில் உள்ள ரசிகர், "அண்ணா, ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்? நான் என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டபோது, "சினிமா ஓடாது, அவ்வளவுதான்" என்று எம்.எல்.ஏ. மீண்டும் கூறுவது பதிவாகியுள்ளது.
இந்த ஆடியோ வெளியானது, ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பியதுடன், அவரது விளம்பரப் பலகைகளை கிழித்து, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரினர்.
இந்தச் சர்ச்சை குறித்து பதிலளித்த வெங்கடேஸ்வர பிரசாத், "நான் தொடக்கத்திலிருந்தே நந்தமூரி குடும்பத்தின் ரசிகன். பாலகிருஷ்ணா மற்றும் என்.டி.ஆர். திரைப்படங்களை நான் எப்போதும் விரும்பிப் பார்ப்பேன். ஆனால் இப்போது, நான் ஜூனியர் என்.டி.ஆரைத் திட்டியது போல போலியான ஆடியோ அழைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த ஆடியோ போலியானது; அதில் உண்மை இல்லை," என்று கூறியுள்ளார்.