அமைச்சர் ஐ பெரியசாமியின் சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Mahendran

திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (13:58 IST)
அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
 
2008-ஆம் ஆண்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பாதுகாவலராக பணிபுரிந்த காவல்துறை அதிகாரி கணேசனுக்கு, முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக அமைச்சர் ஐ. பெரியசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 2012-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கில் இருந்து ஐ. பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்து, ஐ. பெரியசாமியின் விடுவிப்பை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது.
 
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ. பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததுடன், இது குறித்துப் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இதன் மூலம், ஐ. பெரியசாமி மீதான வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்