ஒரு கோயிலுக்காக போரா? கம்போடியாவில் குண்டு மழை பொழியும் தாய்லாந்து! - என்ன காரணம்?

Prasanth K

வியாழன், 24 ஜூலை 2025 (14:07 IST)

உலகம் முழுவதும் ஆங்காங்கே பல நாடுகள் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆசிய நிலப்பரப்பில் தாய்லாந்து - கம்போடியா நாடுகள் இடையே எழுந்துள்ள போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தாய்லாந்து கம்போடியாவின் ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கிய நிலையில், கம்போடியாவும் பதிலுக்கு ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அதை தொடர்ந்து தாய்லாந்தின் 6 போர் விமானங்கள் கம்போடியாவின் ராணுவ தளங்கள் இரண்டை குறிவைத்து குண்டு வீசியுள்ளன. 

 

இப்படி இந்த இரு நாடுகளும் அதிநவீன ஆயுதங்களை கொண்டு தாக்கிக் கொள்வது ஒரே ஒரு கோயிலின் உரிமைக்காகதான் என சொன்னால் நம்ப முடிகிறதா? அதற்கு தாய்லாந்து - கம்போடியா இடையேயான வரலாற்றையும் கொஞ்சம் பார்க்க வேண்டியிருக்கிறது. 

 

1863 முதல் 1953 வரை பிரெஞ்சு காலனியாதிக்கத்தில் இருந்த கம்போடியா சுதந்திரம் பெற்றபோது தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கான எல்லைகளை பிரெஞ்சு அரசு பிரித்து அளித்தது. இரு நாடுகளுக்கிடையே 817 கிலோ மீட்டருக்கு நில எல்லைகள் பிரிக்கப்பட்டபோது ஆறுகள், மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் இரு நாடுகளுக்கும் பகிர்ந்து வரும்படியாக பிரிக்கப்பட்டது. 

 

அப்படி பிரிக்கப்பட்டபோது டாங்ரெக் மலையில் அமைந்துள்ள 11ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான கோயில் (Preah Vihear Temple) கம்போடியா வசம் வந்தது. ஆனால் அந்த கோயில் தாய்லாந்து மக்களுக்கும் புனித தலம் என்பதால், தாய்லாந்தும் அந்த கோயில் உள்ள பகுதி தங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாட தொடங்கியதால் சண்டை மூண்டது. இதில் கம்போடியா உலகளாவிய நீதிமன்றத்தை நாடி, கோயிலை தங்கள் வசம் தக்க வைத்தது.

 

அதுமுதலே அது தொடர்பாக இரு நாடுகளுக்கும் மோதல் இருந்து வரும் நிலையில் கடந்த 2008ம் ஆண்டு அந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன அடையாளத்தை பெற்றது. அதன்பின்னர் 2011ல் இரு நாடுகளிடையே மோதல் நிகழ்ந்தது. அதன்பின்னர் தற்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்