உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த இந்தியா.! இலக்கை அடைந்தது 'ஆதித்யா எல்-1 விண்கலம்..!!

Senthil Velan
சனி, 6 ஜனவரி 2024 (16:57 IST)
சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று வெற்றிகரமாக தனது இலக்கை அடைந்தது. 
 
 
சூரியன் குறித்துக் கண்டறிய உலக நாடுகள் ஆய்வுகள் செய்து வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் நாசா சூரியனைக் குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இந்தியாவும் தனது ஆதித்யா விண்கலம் மூலம் சூரியன் குறித்த ஆய்வுகளைத் தொடங்கியது. இதற்காக ஆதித்யா எல்-1 கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி  இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
 
இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யும். மேலும், இது சூரியினில் ஏற்படும் காந்த புயல்கள் குறித்தும் ஆய்வு செய்யும். இந்த காந்த புயல்கள் பூமியைத் தாக்கும் போது அவை மொத்தமாக சாட்டிலைட் செயல்பாடுகள், மின்சார கட்டமைப்புகளை முடக்கிப் போடும் அபாயம் இருக்கிறது.
ALSO READ: இசை புயலுக்கு இன்று பிறந்தநாள்.!- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!!
இதன் காரணமாகவே ஆதித்யா விண்கலத்தின் ஆய்வுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா விண்கலம் சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்'(எல்-1) என்ற தனது இலக்கை நோக்கிப் பயணித்து வந்தது. 

இந்தச் சூழலில் ஆதித்யா விண்கலம் 127 நாட்கள் பயணித்து இன்று மாலை 4 மணி அளவில் எல்1 புள்ளியைச் வெற்றிகரமாக சென்றடைந்தது. ஆதித்யா விண்கலம், செங்குத்தான சுற்று வட்டப்பாதையில் சூரியனை நோக்கி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குச் சுற்று வட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்த ஆய்வுகளை ஆதித்யா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு..
 
இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா மற்றொரு அடையாளத்தை உருவாக்கி உள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு மையமான ஆதித்யா-எல்1 அதன் இலக்கை அடைந்தது எனவும் மிகவும் சிக்கலான மற்றும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன் என்றும் மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளை தொடர்ந்து தொடர்வோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்