ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா தலமான பெஹல்காமில், பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தபோது நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர்களுடன் 26 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், கோடை விடுமுறைக்காக அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு - காஷ்மீரை சென்ற நிலையில், அவர்கள் பதற்றத்தில் உள்ளனர். இதனால், ஜம்மு - காஷ்மீரில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேறுவதற்கு ஏற்பாடு செய்யும் நோக்கில், இன்று ஸ்ரீநகரிலிருந்து மும்பை மற்றும் டெல்லிக்கு கூடுதலாக தலா 2 விமானங்கள் இயக்கப்படும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவித்துள்ளார்.
மேலும், விமானங்களின் கட்டணம் அதிகரிக்காமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு, தேவைப்பட்டால் இன்னும் கூடுதல் விமானங்களை இயக்க சம்பந்தப்பட்ட துறைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.