காவிரி நீர் பிரச்சனையில், நடிகை சுஹாசினி கர்நாடகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவி வருகிறது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ர்பு தெரிவித்து, இன்று கர்நாடகாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. நடுரோட்டில் பல்வேறு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டது.
தமிழகத்திலிருந்து கார்நாடகா செல்லும் அனைத்தும் வாகனங்களும், ஒசூரிலேயே நிறுத்தப்பட்டன. அதேபோல், கர்நாடகாவிலிருந்தும் எந்த வாகனமும் தமிழகத்திற்கு செல்லவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், நடிகை சுஹாசினி, கர்நாடகாவிற்கு ஆதரவாக கருத்து கூறியதாக ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் உலா வந்தது.
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ள சுஹாசினி “ காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நான் கருத்து கூறியதாக செய்திகள் சமூகவலைத்தளங்களில் வலம் வருகிறது. ஆனால் அது தவறானது. எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதுபோன்ற செய்திகளை தவிர்த்துவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.