குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை உயிருடன் விழுங்க முயற்சித்த நபர் பரிதாபமாக பலியானதாகவும், ஆனால் அந்த கோழிக்குஞ்சு உயிர் தப்பியதாகவும் வெளியான செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் யாதவ் என்ற 35 வயது நபர் திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை என்ற கவலையில் இருந்துள்ளார். அப்போது மந்திர, தந்திரங்களை நம்பிக்கை கொண்ட அவர் ஏதேனும் பரிகாரம் செய்தால் குழந்தை கிடைக்கும் என்று பரிகாரங்களை செய்து வந்தார்.
இந்த நிலையில் ஆனந்த் யாதவ் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். அவருடைய உறவினர்கள் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது, மூச்சு திணறல் காரணமாக அவர் இறந்துவிட்டார் என்று கூறப்பட்டது.
இதனை அடுத்து பிரேத பரிசோதனையில், அவர் தொண்டையில் உயிருடன் ஒரு கோழிக்குஞ்சு சிக்கி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அந்த கோழிக்குஞ்சை உயிருடன் எடுத்தனர். மந்திர-தந்திரங்களில் மிகுந்த நம்பிக்கை கொண்ட ஆனந்த் யாதவ், ஒரு மந்திரவாதியின் பேச்சை கேட்டு கோழிக்குஞ்சை உயிருடன் விழுங்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோழிக்குஞ்சை விழுங்கினால் குழந்தை பிறக்கும் என்று உள்ளூர் ஜோசியர் சொன்னதை நம்பிய அவர், பரிதாபமாக உயிரை இழந்தது அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஆனால் அதே நேரத்தில் கோழிக்குஞ்சு உயிருடன் தப்பித்ததும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.