ஹைதராபாத்தில் 6-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 10-ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன் விரோதம் காரணமாக நடந்தது என கூறப்படுகிறது.
அஸ்வின், தினேஷ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவர்கள் இருவரும் ஹைதராபாத்தின் ஜிங்கல்வாடா பகுதியில் ஒரே பகுதியில் வசித்து வருகிறார்கள். இருவரும் ஒரே பள்ளியில் படிப்பதால் பள்ளிக்கு செல்லும் போதும் ஒரே சாலையில் பயணிப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை 6-ஆம் வகுப்பு மாணவனை 10 வகுப்பு மாணவன் சைக்கிளால் இடித்துள்ளான். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்துள்ளது.
இதனையடுத்து நேற்று தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த 10-ஆம் வகுப்பு மாணவனை 6-ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி பழி வாங்கியுள்ளான். இதனால் படுகாயமடைந்த அந்த மாணவன் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். தற்போது அந்த மாணவன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளது இரு பெற்றோர்களையும் சற்று ஆறுதல் அடைய வைத்துள்ளது.