மிரட்டி பணம் பறிப்​பது தான் நிகிதாவின் வேலை: நிகிதாவின் முன்னாள் கணவர் திடுக்கிடும் தகவல்..!

Siva

வெள்ளி, 4 ஜூலை 2025 (08:02 IST)
திருப்புவனம் மடப்புரம் கோயிலில் காவலாளியாக இருந்த அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரத்தில், தனக்கு எதிராக நகை திருட்டுப் புகார் அளித்த நிகிதா, "மிரட்டிப் பணம் பறிப்பவர்; அதுதான் அவரது வேலை" என்று நிகிதாவின் முன்னாள் கணவரும், ஃபார்வர்டு பிளாக் தலைவருமான திருமாறன்ஜி தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்திலும், காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாறன், "21 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு நிகிதாவையும் அவரது குடும்பத்தையும் தெரியும். அவர் என்னை திருமணம் செய்துவிட்டு, ஒரே நாளில் ஓடிவிட்டார். பாலும் பழமும் சாப்பிடுவதற்கு முன்பே அவர் என்னை விட்டு சென்றுவிட்டார்" என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
 
தொடர்ந்து பேசிய அவர், "அதன் பிறகு அவர் பல திருமணங்கள் செய்து பலரையும் ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிப்போய், மாப்பிள்ளை வீட்டார் மீது வரதட்சணை புகார் கொடுத்து, குடும்பத்தை சித்திரவதைக்கு உள்ளாக்கி, மிரட்டி பணம் பறிப்பதுதான் அவரது முழு நேர வேலை. காவலாளி அஜித் குமார் விஷயத்திலும் பொய்யான புகார்தான் அவர் கொடுத்திருக்க வேண்டும்" என்று குற்றம் சாட்டினார்.
 
எனவே, காவலாளி அஜித் குமார் கொலைக்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். நிகிதா குடும்பத்தை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்" என்று திருமாறன் வலியுறுத்தினார்.
 
நிகிதாவின் தந்தை கோட்டாட்சியராக இருந்தவர் என்றும், அவரது அம்மா அரசு ஊழியர் என்றும் குறிப்பிட்ட திருமாறன், "20 ஆண்டுகளுக்கு முன்பே திருமண மோசடியில் அவருக்கு காவல்துறை அதிகாரிகள் உதவி செய்தனர். அதேபோல் தான் தற்போதும், அதிகாரத்தில் இருப்பவர்களின் உதவியால் அஜித் குமார் இறந்திருக்கிறார்" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
 
இந்த விவகாரம் அஜித் குமார் மரண வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்