கல்லூரி படிக்கும் மாணவியை காதலிப்பதில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஹர்ஷா என்ற மாணவர் சக மாணவர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அவரது பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றுள்ளது. ஆண்டு விழா முடிந்த சில மணி நேரத்தில் ஹர்ஷா கத்தியால் குத்தப்பட்டு பள்ளிக்கு வெளியே உயிருக்கு போராடிக்கொண்டு கிடந்துள்ளார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் சிலர் காவல்துறையினர் உதவியோடு ஹர்ஷாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 20 நிமிடத்தில் ஹர்ஷா உயிரிழந்தார். இதுகுறித்து ஹர்ஷாவை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த மக்கள் கூறியதாவது:-
அங்கு பத்து மாணவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டதை பார்த்தோம். திடீரென இடம் அமைதியானது. இந்த மாணவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது:-
ஹர்ஷாவுக்கும் மற்றோரு பள்ளி மாணவர்களுக்கு இடையே கல்லூரி மாணவியை காதலிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினருக்கும் நடைப்பெற்ற வாக்குவாதத்தின் போது ஒரு மாணவர் கத்தியால் ஹர்ஷாவை குத்தியுள்ளார்.
கொலை செய்யப்பட்டவரும், செய்தவரும் மைனர் என்பதால் இந்த வழக்கை ஜாக்கிரதையாக கையாண்டு வருகிறோம். கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதாக என விசாரணை நடத்தி வருகிறோம், என்று தெரிவித்துள்ளனர்.