தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் சிறை..! ரூ.1 கோடி அபராதம்..! வருகிறது புதிய சட்டம்.!!

Senthil Velan
திங்கள், 5 பிப்ரவரி 2024 (13:30 IST)
நுழைவு தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்தால் பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் என்பதால், இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தேர்வுகள், எஸ்எஸ்சி, ரயில்வே பணிகள் உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. வட மாநிலங்களில் இந்த சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இதனால் தகுதியான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
இந்நிலையில் நுழைவு தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்தால் பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  தேர்வுகளில் மோசடி செய்தால் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கவும் புதிய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ALSO READ: தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகம்.! முதல்வர் மு.க ஸ்டாலின்.!!
 
மேலும் வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடி செய்தாலும் பத்தாண்டுகள் தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வுகளில் நடைபெறும் மோசடி, ஆள் மாறாட்டம் போன்றவற்றை தடுக்க இந்த மசோதா வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்