'சீதக்காதி' திரைவிமர்சனம்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (08:09 IST)
விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு ஏமாற்றம், ஆனால் படம் சூப்பர்

பழம்பெரும் நாடக நடிகரான அய்யாவை சினிமாவில் நடிக்க வைக்க பலர் முயற்சி செய்கின்றனர். ஆனால் பிடிவாதத்துடன் தான் சினிமாவில் நடிக்க முடியாது என்று அய்யா மறுத்துவிடுகிறார். ஆனால் அதே நேரத்தில் நாடகம் சரியாக போகவில்லை, வறுமை துரத்துகிறது, நாடக கம்பெனியின் உரிமையாளர் வாடகை கொடுக்கவே திணறுகிறார். இது போதாதென்று அய்யாவின் பேரனுக்கு ஆபரேஷன், லட்சக்கணக்கில் பணம் தேவை. இந்த நிலையில் திடீரென அய்யா நாடகம் நடித்து கொண்டிருந்தபோதே இறந்துவிடுகிறார். ஆனால் இவர் இறந்த பின்னரும் ஒருசில அதிசயங்கள் நடக்கின்றன, அந்த அதிசயத்தால் அய்யாவின் குடும்ப பிரச்சனைகளும், நாடக கம்பெனியின் பிரச்சனைகளும் தீர்ந்துவிடுகின்றது. அந்த அதிசயம் என்ன? அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை

வழக்கமாக விஜய்சேதுபதி படம் என்றாலே அவரது தனித்துவமான நடிப்பு வெளிப்படும். இந்த படத்தில் கொஞ்சம் ஏமாற்றம். நீளமான ஒளரங்கசீப் காட்சியில் அவர் நன்றாக நடித்திருந்தாலும் போதுமான லைட்டிங், முகத்தை மூடிய மேக்கப்பால் அவரது நடிப்பு தெரியவில்லை.

இந்த படத்தின் உண்மையான ஹீரோ என்றால் இருவரை சொல்ல வேண்டும். அவர்கள் ராஜ்குமார் மற்றும் சுனில். நடிப்பே வராதவாறு நடிப்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது நடிப்பவர்களுக்குத்தான் தெரியும். இருவரின் நடிப்பும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்

அடுத்ததாக மெளலி. அனேகமாக இந்த கேரக்டருக்கு இவரை விட்டால் நிச்சயம் வேறு நடிகர் இல்லை எனலாம். தேசிய விருது பெற்ற அர்ச்சனாவை படத்தில் பயன்படுத்தாமல் உள்ளனர். பகவதி பெருமாள், மகேந்திரன், கருணாகரன் மற்றும் நாடக நடிகர்கள் அனைவரும் கேரக்டராகவே மாறியுள்ளனர்.

காயத்ரி, ரம்யா நம்பீசன், பார்வதி நாயர் ஆகிய மூவரும் நடிகைகளாகவே நடித்துள்ளனர். ஒரே ஒரு காட்சியில் வரும் பாரதிராஜா சூப்பர்

கோவிந்த் வசந்தா இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. பின்னணி இசையும் மிக அருமை. சரஸ்காந்த் ஒளிப்பதிவு ஓகே என்றாலும் கோவிந்த்ராஜ் படத்தொகுப்பு ரொம்ப சுமார். ரிப்பீட் காட்சிகளும், படத்தின் நீளமும் ஒரு பெரிய மைனஸ்

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் போலவே இந்த படத்திலும் ஒரு சூப்பர் டுவிஸ்ட் வைத்த இயக்குனர் பாலாஜி தரணிதரனுக்கு பாராட்டுக்கள். விஜய்சேதுபதி வரும் முதல் 40 நிமிட காட்சிகள் மிக மெதுவாக இருப்பதுடன் கொஞ்சம் போரடிக்கவும் செய்கிறது. ஆனால் விஜய்சேதுபதி கேரக்டர் இறந்தவுடன் படம் ஜெட் வேகத்தில் பறக்கின்றது. இருப்பினும் இரண்டாவது பாதியில் ரிப்பீட் காட்சிகள், லாஜிக் இல்லாத கோர்ட் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் சூப்பர் டுவிஸ்ட், காமெடி காட்சிகளுக்காக படத்தை குடும்பத்துடன் தாராளமாக பார்க்கலாம்

ரேட்டிங்: 3/5

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்