கருப்பன் – விமர்சனம்

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (15:08 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான படம் ‘கருப்பன்’. ‘ரேணிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர்செல்வம், ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தன்யா, இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.


 
 
வேலைக்குப் போகாமல் வெட்டியாக ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, யாருக்கும் அடங்காத காளையைக் கூட அசால்ட்டாக அடக்கிவிடுவார். பக்கத்து ஊரில் கொஞ்சம் பெரிய ஆளான பசுபதி, தன் மாட்டை யாரும் அடக்க முடியாது என சவால் விடுகிறார். ‘விஜய் சேதுபதி தன்னுடைய மாட்டை அடக்கிவிட்டால், அவருக்கு தன் தங்கையை மணம் முடித்துக் கொடுப்பதாக’ வாக்கு தருகிறார்.
 
விஜய் சேதுபதி அந்த மாட்டை அடக்கிவிட, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தங்கை தன்யாவை மணம் முடித்துக் கொடுக்கிறார் பசுபதி. ஆனால், அந்த வீட்டிலேயே வாழும் தன்யாவின் முறைப்பையனான பாபி சிம்ஹாவுக்கு, தன்யா மேல் அவ்வளவு ஆசை. ‘ஆயிரம் பேரை அவள் கல்யாணம் பண்ணிக் கொண்டாலும், அத்தனை பேரையும் அறுத்துவிட்டு நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்’ என சூளுரைக்கிறார் பாபி சிம்ஹா. அதன்பிறகு என்ன ஆனது என்பது மீதிக்கதை.
 
மாடுபிடி வீரனாக விஜய் சேதுபதியின் தோற்றமும், முறுக்கு மீசையும் அவ்வளவு பொருத்தம். காதல் காட்சிகளில் மனுஷன் என்னமா நடிக்கிறார். விஜய் சேதுபதி – தன்யா அன்புக் காட்சிகள், பிரம்மச்சாரிக்கு கூட கல்யாண ஆசையைத் தூண்டிவிடும் அளவுக்கு அமைந்திருக்கின்றன. அதேசமயம், முரட்டுக் குணத்திலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் அப்படியே வேறு ஆளாக மாறி நிற்கிறார்.


 

 
கிராமத்துப் பெண்ணாக தன்யாவின் அழகு, ஆர்ப்பாட்டமில்லாமல் ரசிக்க வைக்கிறது. சுரிதாரைவிட, புடவையில் அவ்வளவு பாந்தமாக இருக்கிறார்.  ஒரு சாயலில், ‘தவசி’ படத்தில் நடித்த பிரதியுக்‌ஷாவை நினைவுபடுத்துகிறார். தன்யாவின் அண்ணனான பசுபதிக்கு அவ்வளவாக வேலை இல்லை.
 
வில்லனாக பாபி சிம்ஹா செய்யும் நரித்தனங்களும், மற்றவர்களுக்கு அது தெரியாமல் பச்சைப்பிள்ளை போல அவர் நடந்து கொள்ளும் விதமும் பக்கா. கூடவே இருந்து குழிபறிப்பவர்களைக் கண்முன் நிறுத்துகிறார். சாகும்போது கூட தன்யாவைப் பார்த்து அவர் கண் அடிப்பது, வில்லத்தனத்தின் மகுடம். ஆனால், ஒருதலைக்காதலுக்காகத்தான் அவர் இவ்வாறு செய்கிறார் என்று நினைக்கும்போது பரிதாபம் வருகிறது.
 
விஜய் சேதுபதியும், சிங்கம்புலியும் சேர்ந்து செய்யும் சேஷ்டைகள், வயிறு வலிக்க சிரிப்பைத் தருகின்றன. அதுவும் அந்த பார் சீனில் இருவரும் ஆடும் காட்சி, அடடா… டி.இமானின் இசையில் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை என்றாலும், பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
 
முதல் பாதியில் அடிக்கடி பாட்டு போட்டு கடுப்பேத்துவது, மிகப்பெரிய மைனஸ். இரண்டு பாடல்களை கட் செய்துவிட்டால், இன்னும் நன்றாக இருக்கும். கிட்டத்தட்ட இயக்குநர் முத்தையாவின் படத்தைப் பார்த்தது போன்ற உணர்வு இருக்கிறது. கதைக்களமும் பழசு என்பதால், அடுத்து இதுதான் நடக்கும் என ஊகித்துவிடுவது இந்தப் படத்தின் மைனஸ்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்