'கன்னி' திரைப்பட விமர்சனம்!

J.Durai
வெள்ளி, 17 மே 2024 (18:17 IST)
சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ்  தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கன்னி'.
 
இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா கிரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்துக்கு ஒளிப்பதிவு ராஜ்குமார், இசை செபாஸ்டியன் சதீஷ்,படத்தொகுப்பு சாம், பாடல்கள் உமாதேவி, கலை சக்திவேல் மோகன், சண்டைப் பயிற்சி ரமேஷ் பாபு, மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பாதையில்   தன்னுடன் கைக்குழந்தை ஒன்று ,பள்ளி செல்லும் வயதுச்சிறுமி ஒன்று என இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கன்னிப் பெண்ணான சேம்பி நடந்து செல்கிறாள்.மாலை மயங்கி இருட்டாகிறது.அங்கே ஒரு பெரியவர் எங்கே செல்கிறாய் என்று கேட்டவர், அச்சமில்லாமல் நடக்கும் அந்தப் பெண்ணுக்கு  வழித்துணையாக வந்து அந்த ஊரில் கொண்டு வந்து விடுகிறார்.
 
நள்ளிரவில் ஊர் வந்த கன்னிப்பெண் சேம்பியைப் பார்த்து அருகில் இருப்பவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள், அதிர்ச்சி அடைகிறார்கள். நீ தனியாகவா வந்தாய்? என்கிறார்கள் .என்னை ஒரு பெரியவர் கொண்டு வந்து விட்டார் என்கிறாள்.
 
ஆனால் அந்தப் பெரியவர் இறந்து பல்லாண்டுகள் ஆகின்றன என்கிறார்கள். அப்போதே அங்கே ஒரு அமானுஷ்யம் வந்து விடுகிறது.
 
சேம்பி தன் தாத்தா வீட்டுக்குச் செல்கிறாள்.அந்த வீட்டில் ஆள் இல்லை எனவே ஒரு கோவிலில் தங்குகிறாள். பிறகு தாத்தாவைச் சந்தித்து மகிழ்ச்சியுடன் அங்கே இருக்கிறாள்.
பிறகு அவளது  முன் கதை காட்டப்படுகிறது.அவள் தனது அண்ணன் வேடன், அண்ணி நீலிமா என்று அண்ணன் குடும்பத்தோடு மிகவும் பாசமாக இருக்கிறாள்.அந்த ஊர் மூலிகைக்குப் பெயர் போனது.
 
உயிராபத்து நோய்களையும் தீர்க்கும் மூலிகைகளும் மருந்துகளும் அங்கே உண்டு. 
அதைப் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த இயற்கை வளங்களை ஆக்கிரமித்து வணிக மயமாக்கி பயன்படுத்திக் கொள்ள ஒரு கும்பல் முயல்கிறது.அதற்கு இடையூறாக இருப்பவர்களைத் துன்புறுத்துகிறார்கள்
 
கொலையும் செய்கிறார்கள், அப்படி சேம்பியின் அண்ணனும் அண்ணியும் கொல்லப்படுகிறார்கள். அந்த மூலிகை ரகசியத்தையும் தன் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள அண்ணனின் இரு குழந்தைகளுடன் தப்பித்து வெளியூர் ஓடுகிறாள் சேம்பி.அப்படித்தான் ஜவ்வாது மலைப் பக்கம் உள்ள தன் தாத்தா ஊருக்குச் செல்கிறாள். அங்கே சென்றாலும் அவளை அந்தக் கும்பல் தேடி வந்து துரத்துகிறது.
 
அவள் அவர்களை எப்படி எதிர்கொள்கிறாள்? அவள் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டாளா? அந்த மூலிகை மருந்துகளையும் மாந்திரீக ரகசியங்களையும் காப்பாற்றினாளா என்பதுதான் மீதிக் கதை.
 
படத்தில் சேம்பியாக அஷ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். தோற்றம், நடிப்பு , உடை, உடல் மொழி என்று அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் .கொஞ்சம் கூட நடிப்பு என்று தெரியாமல் அந்த சேம்பியாகவே வாழ்ந்துள்ளார்.
 
அதேபோல வேடனாக வரும் மணிமாறன், அவரது மனைவி நீலிமாவாக வரும் தாரா கிரிஷ் இருவரும்  மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.எதிர்மறைக் கதாபாத்திரத்தில் வரும் ராம் பரதனும் மலைவாசி மனிதராகவே மாறியுள்ளார்.
இவர்கள் தவிர படத்தில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் கூட நடிப்பில் யதார்த்தம் காட்டி அந்த மலைக் கிராமத்தில் வாழும் மனிதர்களாகவே நடித்துள்ளார்கள்.
 
படத்தின் பிரதான அம்சமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று கதையின் நிகழ்விடங்கள்தான்.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே புள்ளஹள்ளி ,மற்றும் ஜவ்வாது மலைப்பகுதிகளில் காட்சிகள் வருகின்றன. மலைப்பகுதியில் காடு, பாறைகள் நிறைந்த கரடுமுரடான இடங்களில் பல்வேறு கோணங்களில் படமாக்கி கண்முன்னே அழகான ஓவியங்களாகக் காட்சிகளைப் படப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ராஜ்குமார்.
 
முழுக்க முழுக்க இயற்கை வெளிச்சத்திலேயே படமாக்கி உள்ளார். யதார்த்தமாக மட்டுமல்ல அழகியலும் நிறைந்த காட்சிகள் படத்தின் பெரும் பலம்.
 
படத்தில் வரும் பாத்திரங்கள் அதிகம் பேசுவதில்லை ஆனால் நறுக்கெனப் பேசுகின்றன.தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னட  மொழி வாசனை வீசும் அவர்கள் பேசும் மொழியே படத்திற்கு வேறு நிறத்தினைக் கொடுத்து விடுகிறது.
நீளமாகப் பேசாத கதாபாத்திரங்கள் வலம் வரும் இந்தப் படத்தில் அவர்களின் உணர்வுகளைத் தனது பின்னணி இசையால் பேச வைத்துள்ளார் இசையமைப்பாளர் செபாஸ்டியன் சதீஷ்.குறிப்பாக உச்சகட்ட காட்சியில் வசனங்களே இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன. அவரது பின்னணி இசை தான் பேசுகிறது.
பாடல் இசையிலும் குறையில்லை . குறிப்பாக
'சாய்ந்தாடும் ஆகாயமே தோள் சேரும் பூலோகமே ' மனித நல்லுணர்வுகளின் குரலாக ஒலிக்கிறது.
பாடல்கள் உமாதேவி.
 
படக் குழுவினர் எளிதில் நுழையாத லொக்கேஷன்களில் தேடிப் போய் படமாக்கி இருக்கிறார்கள். நடிகர்களும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்கள். படத்தில் ஏதோ ஒரு போதாமையை உணர முடிகிறது. சொல்ல வேண்டிய கருத்துக்களை, உணர்வுகளை அழுத்தமான காட்சிகளால் உருவாக்காமல் மேலோட்டமாக கதை நகர்வது படத்தின் பெரும் பலவீனமாக இருக்கிறது.
 
படத்தில் சித்த மருத்துவத்தின் மகிமை பற்றிப் பேச முயன்றுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனம் நம் பாரம்பரியத்தை வணிகப்படுத்தும் முயற்சியில் இருப்பதும் சொல்லப்படுகிறது. ஆனால் எதுவுமே அழுத்தமாகச் சொல்லப்படாதது பெரிய குறையாக உள்ளது.
படத்தில் சில பாத்திரங்களுக்கு அழுத்தமான  காரணம் இல்லாததால் ஒட்ட மறுக்கின்றன.
 
மொத்தத்தில் வித்தியாசமான பின்னணியில், நல்ல நடிகர்களின் நடிப்பில், அழகுணர்வு கொண்ட காட்சிகளில், மண் மணம் மாறாத இசையில் 126.54 நிமிடங்கள் கொண்ட இப்படம் உருவாகி இருக்கிறது. 
 
மொத்தத்தில் கன்னி என்பது தூய்மை, பரிசுத்தம், சக்தி என்ற பெயரில் சொல்லப்படுகிறது. ஆயிரம் இருந்தாலும் இந்தக் 'கன்னி', வணிக சூத்திரங்களுக்கு உட்படாத, ஆபாசக் கலப்பில்லாத,மழை மொழி பேசும் மலை மொழி பேசும்,
 
மொத்தத்தில் தொன்மையின் மணம் வீசும், பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கும்  படமாகத் "கன்னி" அமைந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்