மறக்க முடியுமா - தி கிரேட் எஸ்கேப்

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2017 (10:03 IST)
பிரிஸன் பிரேக்கிங்கை - அதாவது சிறையிலிருந்து தப்பித்தலை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் ஒன்று, தி கிரேட் எஸ்கேப். 1963 -இல் வெளியான அமெரிக்கப் படமான இது உண்மைச்  சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

 
1947 -இல் ஜெர்மனியில் உள்ள பிரத்யேகச் சிறைக்கு பிரிட்டன், யுஎஸ், ஆஸ்ட்ரேலியா என்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த  போர்க் கைதிகளை கொண்டு வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பல்வேறு சிறைகளிலிருந்து தப்பிக்க முயன்றவர்கள்.  தப்பிக்கிற கலையில் கில்லாடிகள். அதன் காரணமாகத்தான் அவர்கள் இந்த பிரத்யேகச் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
 
சிறைக்கு வந்த முதல்நாளே சிலர் தப்பிக்க முயல்கின்றனர். ஆனால் ஜெர்மன் அதிகாரிகள் அதனை எளிதாக கண்டுபிடித்துவிடுகிறார்கள். அதில் இருவர், அவர்கள் செய்த செயலுக்காக தனிமைச்சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
 
அந்தச் சிறைக்கு ரோஜர் பார்ட்லெட் என்கிற கைதியும் கொண்டு வரப்படுகிறார். அவர் பல சிறைகளிலிருந்து தப்பிக்கும் நிகழ்வுகளுக்கு தலைவராக இருந்தவர். இன்னொருமுறை தப்பிக்க நினைத்தால் கொலை செய்யப்படுவாய் என அவர்  எச்சரிக்கை செய்யப்படுகிறார்.
 
கைதிகள் அனைவரும் ராணுவ அதிகாரிகள் என்பதால் பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஹவுஸ் அரெஸ்ட் போன்றே  வைக்கப்பட்டிருக்கின்றனர். பார்ட்லெட் வந்த அன்றே கைதிகள் ஒன்றுகூடுகின்றனர். ஒரே நேரத்தில் டாம், டிக், ஹாரி என்று  மூன்று சுரங்கங்களை தோண்டுவது என்று முடிவாகிறது. அதிகாரிகள் ஒரு சுரங்கத்தை கண்டுபிடித்தாலும் இன்னொன்றின் வழியாக தப்பிக்க முடியும். 16 முறை சுரங்கம் தோண்டிய அனுபவசாலியான டேனி என்ற கைதி முதல் சுரங்கத்தை தோண்ட  ஆரம்பிக்கிறான்.
 
தி கிரேட் எஸ்கேப் சுவாரஸியமான படம். சுரங்கம் தோண்டுவது எளிதான விஷயமில்லை. பல நடைமுறை சங்கடங்கள்  உண்டு.
 
1. சுரங்கம் தோண்டும் போது சத்தம் வரக்கூடாது. அப்படியே வந்தாலும் அதிகாரிகளுக்கு கேட்கக் கூடாது...
 
2. தோண்டிய மண்ணை அப்புறப்படுத்த வேண்டும். அது அதிகாரிகளுக்கு தெரியாதவிதத்தில் நடக்க வேண்டும்...
 
3. அவர்கள் இருப்பது ஜெர்மனி. ஆகவே தப்பித்தால் மட்டும் போதாது. ஜெர்மனியிலிருந்து வெளியேற ரயில் டிக்கெட், ஐடி  கார்ட், சிவிலியன் உடைகள், பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்தையும் தயார் செய்ய வேண்டும்...
 
இதுபோன்ற சவால்களை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டு சமாளிக்கிறார்கள் என்பது சுவாரஸியமாக படத்தில்  சொல்லப்பட்டுள்ளது.
 
250 பேர் தப்பிக்க போட்ட திட்டத்தில் 76 பேரால் மட்டுமே தப்பிக்க முடிகிறது. அது ஏன்?
 
76 பேர்களில் 50 பேர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அது எப்படி?
 
23 பேர்கள் மறுபடியும் சிறைக்கு திரும்ப, 3 பேர் மட்டுமே எப்படி தப்பித்தனர்?
 
இந்த கேள்விகளுக்கான விடை, படத்தின் கூடுதல் சுவாரஸியம்.
 
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் வணிக வெற்றிக்காக தப்பித்தல் காட்சிகளை கொஞ்சம்  சாகஸத்துடன் எடுத்திருப்பார்கள்.
 
இன்றும் பிரிஸன் பிரேக்கிங் படங்களில் இந்தப் படம் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.
அடுத்த கட்டுரையில்