’அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை’ – வைகோ எனும் சுவாரஸ்யம் !

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (10:24 IST)
கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தன்னைத் தோற்கடித்த காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு வைகோ நேற்று வாக்கு சேகரித்தார்.

’அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை’ என்பது மிகவும் பிரபலமானக் கூற்று. அது தமிழக வைகோவுக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தும்.  தமிழகத்தில் வைகோ கூட்டணி வைக்காதக் கட்சிகளே இல்லை. இந்த தேர்தலில் கூட்டணி வைத்தக் கட்சியையே அடுத்த தேர்தலில் எதிர்த்துக் கூட்டணி வைப்பார்.

வைகோவின் மிகக்குறைவான வளர்ச்சிக்கு அவரது இந்தக் கூட்டணி கொள்கைகளுக்கு முக்கியப்பங்கு உண்டு எனக் கூறப்படுவதும் உண்டு. திமுகவில் இருந்து பிரிந்த வைகோ பின்பு அவர்களுடனேயே கூட்டணி வைத்ததும் பொடா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததுமே அதற்கான சான்று.

இப்படி மாற்றி மாற்றிக் கூட்டணி வைப்பதால் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். அதுபோல கடந்த 2009 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களில் தன் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரித்துள்ளார். குறிப்பிட்ட இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் வைகோவுக்கு எதிராகப் போட்டியிட்டவர் மாணிக்கம் தாகூர். விருதுநகர் தொகுதியில் கடந்த 2009-ல் 2,91,423 வாக்குகள் பெற்ற வைகோவை பின்னுக்குத் தள்ளி 3,07,187 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் மாணிக்கம் தாகூர். அப்போது வைகோ அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தார். மாணிக்கம் தாகூர் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தார்.

அதேப்போல 2014 ஆம் ஆண்டு தேர்தலில் இருவரும் நேருக்கு நேர் மோதினர். ஆனால் இருவ்ருமே வெற்றி பெறாமல் அதிமுக வேட்பாளர் வெற்றிப் பெற்றார்.  ஆனால் இப்போது இருவருமே திமுகக் கூட்டணியில் இடம்பெற்றிருப்பதாலும் விருதுநகர் தொகுதியில் வைகோவுக்கு கணிசமான வாக்குவங்கி இருப்பதாலும் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக வைகோ நேற்று  பிரச்சாரம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்