நெட்ப்ளிக்ஸ் தனது பயனாளர்கள் அதிகமான நபர்களுக்கு பாஸ்வேர்ட் ஷேர் செய்வதை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஓடிடி தளமாக நெட்ப்ளிக்ஸ் உள்ளது. பல நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ள நெட்ப்ளிக்ஸ் மொபைல், ஸ்மார்ட் டிவிகள், லேப்டாப்கள் என அனைத்து வித சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
நெட்ப்ளிக்ஸில் ஒரு டிவைசில் மட்டுமே படம் பார்க்கும் சப்ஸ்க்ரிப்ஷன் முறை மற்றும் 4 டிவைஸ்களில் ஒரே கணக்கை கொண்டு படம் பார்ப்பதற்கான சப்ஸ்கிரிப்ஷன் முறை என ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ப சில சந்தா முறைகளை பின்பற்றி வருகிறது. இதில் 4 டிவைஸ்களை பயன்படுத்தும் சந்தா முறையை பயன்படுத்தி பலர் தங்கள் நண்பர்களுடன் நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வது வழக்கமாக உள்ளது.
இதனால் தனது சப்ஸ்க்ரைபர்கள் குறைவதை தடுக்க நெட்ப்ளிக்ஸ் தற்போது புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி நெட்ப்ளிக்ஸ் லாக் இன் செய்யப்படும் வைஃபை நெட்வொர்க்கை கொண்டு அதன் ஹோம் நெட்வொர்க், ஐபி அட்ரஸ் பதிவு செய்யப்படும். அதன்பின் அந்த ஹோம் வைஃபை நெட்வொர்க்கிலிருந்து டிவி, மொபைல் உள்ளிட்ட சாதனங்களில் (அதிகபட்சம் 4 சாதனங்கள்) படங்களை காண முடியும்.
மேலும் இந்த சாதனங்களில் மாதத்திற்கு ஒருமுறையாவது படங்கள், வெப் சிரிஸ் பார்க்க வேண்டும். 31 நாட்களுக்குள் ஒருமுறை கூட படம் பார்க்காத டிவைஸ்களில் நெட்ப்ளிக்ஸ் தானாக ப்ளாக் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அதுபோல வெளியூர் பயணித்தால் அப்போது செல்போனிலோ, லேப்டாப்பிலோ நெட்ப்ளிக்ஸ் பார்க்க விரும்பினால் அது ஹோம் நெட்வொர்க்குடன் இணைப்பில் இல்லாததால் ஓடிபி கொண்டு லாக் இன் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக வெளியிலிருந்து லாக் இன் செய்யப்படும் கணக்குகள் 7 நாட்கள் மட்டுமே படம் பார்க்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதுபோல சிங்கிள் லாக் ஒன் சப்ஸ்கிரிப்ஷன் ப்ளான்களில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ள போனில் மட்டுமே நெட்ப்ளிக்ஸை காண இயலும் என்றும் கூறப்பட்டுள்ளது.