கொரோனாவை கண்முன் காட்டிய கோன்டஜியோன்! – இந்த படத்தை பார்த்திருக்கீங்களா?

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (10:46 IST)
இப்போது உலகையே ஆட்டி வைக்கும் கொரோனா பற்றி 2011ல் ஹாலிவுட்டில் ஒரு படம் வந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

கொரோனா ஆபத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் பலருக்கு அதன் ஆபத்து குறித்த சரியான விழிப்புணர்வு இல்லை. எவ்வளவுதான் அரசாங்கம் விளம்பரம் செய்தாலும், அந்த வைரஸின் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை பலர் இன்னமும் உணரவில்லை.

இப்போது கொரோனா எப்படி இவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதை பற்றி 2011ல் வெளியான படம்தான் கோண்டஜியோன் (Contagion). க்ளப்பில் சாதாரணமாக சீட்டு விளையாடிய பெண் ஒருவருக்கு விபரீதமான வைரஸ் ஒன்று பரவுகிறது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த வைரஸ் தொட்டாலே பரவும் என்பதை கண்டறிந்த விஞ்ஞானிகள் உடனடியாக அந்த பெண்ணோடு பழகியவர்களை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள்.

க்ளப்பில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் அவரோடு இருந்தவர்களை கண்டுபிடிக்க அவர்களுக்கு ஏற்கனவே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுகிறது. தொடரும் தேடுதல் வேட்டையில் பலர் வெளிநாடுகளுக்கு சென்று விட உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவி விடுகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. மக்கள் வீதிகளில் போராடுகின்றனர். அரசாங்கங்கள் எப்படி இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்து உலகை காப்பாற்றினார்கள்? காப்பாற்றினார்களா இல்லையா? என்பதை மிகவும் பரபரப்பாக சொல்லியிருப்பார்கள்.

அந்த படத்திலும் சரி, தற்போதைய நிலவரத்திலும் சரி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மக்கள் பயப்படுவதற்காக அல்ல, விழிப்புணர்வோடு இருப்பதற்காக இந்த படத்தை பார்க்க சொல்லி பலர் பரிந்துரைக்கின்றனர். அகாடமி விருது வென்ற கேட் வின்ஸ்லெட் இதில் மருத்துவ ஆராய்ச்சியாளராக நடித்திருக்கிறார்.

வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள் விழிப்புணர்வுக்காகவாவது இந்த படத்தை பார்க்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்