கருடாழ்வாரின் சிறப்புமிக்க ஸ்தலங்கள் எங்குள்ளது தெரியுமா...?

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (17:10 IST)
கருடனை வானில் தரிசிப்பதும், கருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பதும் பிறவிப் பயனைத் தரும் என்பார்கள். காக்கும் கடவுளான திருமாலுக்கு அவர் மனவேகத்துக்கு தகுந்த விரைவான ஆற்றல் கொண்டவர் கருடாழ்வார். திருமாலின் கொடியாக, வாகனமாக, காவலனாக, சாமர சேவை செய்யும் தொண்டனாக விளங்குபவர் கருடன்.


பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை. பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், 'பிரம்மோற்சவம்' என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது.

பதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம்.பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

கருடாழ்வாரை தரிசிக்கும்போது, குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச ! விஷ்ணு வாஹ ! நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம: என கூறி வணங்க வேண்டும்.

பெரிய திருவடி என வைஷ்ணவர்களால் போற்றப்படும் கருடாழ்வாரை, இந்தத் திருநாளில் தரிசனம் செய்வதாலும், வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும்.

ஸ்ரீரங்கத்தில் பெரிய கருடன் மற்றும் அமிர்த கலச கருடன், கும்பகோணம் நாச்சியார் கோயில் கல் கருடன் ஆகியவை கருடாழ்வாரின் சிறப்புமிக்க ஸ்தலங்களாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்