கருடனை வானில் தரிசிப்பதும், கருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பதும் பிறவிப் பயனைத் தரும் என்பார்கள். காக்கும் கடவுளான திருமாலுக்கு அவர் மனவேகத்துக்கு தகுந்த விரைவான ஆற்றல் கொண்டவர் கருடாழ்வார். காரணம் திருமாலின் வாகனம் கருடன் என்றால் கருடரின் வாகனம் வாயு.
திருமாலின் கொடியாக, வாகனமாக, காவலனாக, சாமர சேவை செய்யும் தொண்டனாக விளங்குபவர் கருடன். ஆடி மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் பஞ்சமி திதி நாள் கருட பஞ்சமி என்று போற்றப்படுகின்றது. இது கருடாழ்வாரின் பிறவித் திருநாள் என்றும், கருடனின் தாயான விநதையைக் காக்க இந்திரலோகத்தில் இருந்து அமிர்தத்தை கருடன் கொண்டு வந்த நாளே கருட பஞ்சமி என்றும் கூறப்படுகிறது.
"கருடனின் திருவருளைப் பெற்றுத் தரும் இந்த கருட பஞ்சமி நாளில் கருட பகவானை வழிபாடு செய்து வணங்குவதால், பகைமை உணர்வு நீங்கும். கர்ம வினைகளும், தோஷங்களும் விலகும்; வாழ்க்கைச் செழிக்கும். மேலும் பக்தி, நினைவாற்றல், வேதாந்த அறிவு, வாக்கு சாதுர்யம் போன்றவையம் கிட்டும் என்கிறது ஈஸ்வர சம்ஹிதை. மனவியாதி, வாய்வு, இதய நோய், விஷ நோய்கள் தீரும்.
உடன் பிறந்த சகோதரர்களின் நலனுக்காகவும், பலமும் அதிர்ஷ்டமும் கொண்ட பிள்ளைகளைப் பெறவும் பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்து கருடனைப் போற்றுவார்கள். வழக்கமாக இந்நாள் அதிகாலை பூஜை கருட ஹோமத்துடன் திருமஞ்சனமும், இரவில் கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடைபெறும். அப்போது பெருமாளோடு, கருடாழ்வாரை தரிசிப்பது வைகுந்த பதவியை அளிக்கும் என்பார்கள்.