மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோயில், தையல்நாயகி அம்மன் மற்றும் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலாக சிறப்பாக விளங்குகிறது. நவகிரகங்களில் முக்கியமான செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சித்தர், செல்வமுத்துக்குமார சுவாமி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இக்கோவிலில் உள்ள 'சித்தாமிர்த தீர்த்தம்' எனும் தீர்த்தத்தில் நீராடி, 'திருச்சாந்துருண்டை' எனும் பிரசாதம் உண்பவர்கள் 4,448 வியாதிகளில் இருந்து விடுபடுவார்கள் என்ற நம்பிக்கை நீடித்துவருகிறது.
சித்திரை மாத 2-வது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, காரைக்குடி, சிவகங்கை, திருச்சி, பரமக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த நகரத்தார் பக்தர்கள் தங்களது குலதெய்வமான தையல்நாயகியை தரிசிக்க ஆயிரக்கணக்கில் பாதயாத்திரை செய்து வந்தனர். வழக்கம்போல், அவர்கள் வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை பூஜித்து, கோவிலில் காணிக்கையாக செலுத்தினர். பின்னர் புதிய வேண்டுதலுக்காக புதிய குச்சியை எடுத்துச் சென்றனர்.
இந்த பெரிய விழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்காக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால், கோவில்தொகுப்பு பகுதி விழாக்கோலத்தில் திளைத்தது.