உடல் பருமன் குறைத்திட உதவும் உணவு முறைகள்....

Webdunia
வியாழன், 19 மே 2022 (23:28 IST)
உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். கொலஸ்டிரால் சில வகை உணவுகளில் அதிகமாக காணப்படுகிறது. உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் மட்டுமே உடல் பருமனுக்கு தீர்வாகாது. சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பது அவசியம்.
 
ஓட்ஸ், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் என்கின்றனர்  ஆராய்ச்சியாளர்கள். பாதாம் போன்ற பருப்பு வகைகள் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதால், பெரும்பாலும் இத்தகைய  உணவு வகைகளை பலரும் தவிர்க்கின்றனர். அதற்கு மாறாக இவற்றை சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான  கொலஸ்ட்ரால் கரையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
 
சமீபத்திய ஆய்வில் ஓட்ஸ், நட்ஸ் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுவது தெரிய  வந்துள்ளது. அதிகளவு நார்ச்சத்து உள்ள உணவுகளும் உடலுக்கு அவசியம். சோயா உணவு வகைகளான சோயா பால், டோஃபு  ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பச்சை பட்டாணி, லென்டில்ஸ் உள்ளிட்ட பயிறு வகைகளை அதிகம் சேர்த்து  கொள்ள வேண்டும்.
 
தொப்பை குறைய...
 
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில்  குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
 
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை  குறையும்.  சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
 
அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
 
கொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ்,  தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. 
 
சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு  வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். 
 
வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும்  மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்