இந்தியாவில் ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் பிரசித்தமாக இருப்பது போலவே அலி எக்ஸ்பிரஸ், க்ளப் பேக்டரி, ஷைன் ஆகிய தளங்களும் பிரபலமாக உள்ளன. இந்த சீன வலைதளங்களில் ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் இந்தியர்கள் பொருட்களை ஆர்டர் செய்கிறார்கள். பண்டிகை காலங்களில் இது மேலும் அதிகரிக்கிறது.
அனைத்து ஆன்லைன் தளங்களுக்கும் இந்தியாவிற்குள் பொருட்களை விற்பதற்கு சுங்க வரி, ஜி.எஸ்.டி ஆகியவை உண்டு. ஆனால் அலி எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்கள் இந்த வரியை செலுத்தாமல் பொருட்களை டெலிவரி செய்ய நூதனமான முறையை பயன்படுத்தியுள்ளது.
அதாவது 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான பொருட்களை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்தால் அதை பரிசு பொருள் என்ற ரீதியில் அனுப்பி வைத்து வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்கள். 5 ஆயிரத்திற்கும் குறைவான பொருட்களுக்கு வரி கிடையாது என்பதால் இந்திய ஆன்லைன் தளங்களில் உள்ள பொருட்களின் விலையை விட, சீன தளங்களில் உள்ள பொருட்களின் விலை குறைவாகவும் உள்ளது. இப்படி பரிசு என்று அனுப்பப்படும் சீன பொருட்களுக்கு இன்வாய்ஸ் வைக்கப்படுவதில்லை. இதன் மூலம் சீன வலைதளங்கள் 40% வரை அவர்கள் வரிகளில் மிச்சப்படுத்தி ஏய்ப்பு செய்துள்ளதாக தெரிகிறது.