வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டத்தை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த போராட்டத்தின்போது, 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, புது டெல்லி துணை ஆணையர் தேவேஷ் குமார் மஹ்லா காவல்துறை தரப்பில் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "தேர்தல் ஆணையம் 30 எம்.பி.க்கள் மட்டும் தங்களை சந்திக்கலாம் என ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், பாராளுமன்றத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பேரணியாக வந்தனர். அவர்களின் பாதுகாப்புக்காகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காகவும் அவர்களை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். பின்னர், குல், பிரியங்கா உள்பட 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள்கைது செய்யப்பட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "சில எம்.பி.க்கள் இரும்புத் தடுப்புகளை தாண்டிச் செல்ல முயன்றனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த கூட்டம் அமைதியான முறையில் நடைபெறவில்லை. காவல்துறை விதிமுறைகளுக்கு இணங்காமல், அதிக எண்ணிக்கையில் கூடியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றும் தேவேஷ் குமார் மஹ்லா கூறினார்.
இந்தச் சம்பவம், ஜனநாயக ரீதியான போராட்டங்களை அடக்குவதற்கான ஒரு முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதற்குக்கூட உரிமை மறுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.