வாட்ஸ் அப்பை தடை செஞ்சுட்டாராம் மோடி!? – வைரலாகும் வதந்தி!

செவ்வாய், 17 டிசம்பர் 2019 (13:45 IST)
வாட்ஸ் அப் கணக்குகளை பிரதமர் மோடி தடை செய்ய இருப்பதாகவும் அதுகுறித்த செய்திகளை பகிராதவர்கள் கணக்கு முடக்கப்படும் எனவும் ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் உலா வரத் தொடங்கியுள்ளது.

சமூக வலைதளங்களான டிவிட்டர், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் அடிக்கடி போலியான தகவல்கள், சித்தரிக்கப்பட்ட செய்திகள் வெளியாவது அதிகரித்து வருகிறது. அதிலும் பிரதமர் மோடியை வைத்து வெளியான போலி மெசேஜ்கள் எண்ணற்றவை. சில வருடங்களுக்கு முன்னாள் பிரதமர் மோடி 15 லட்சம் வங்கி கணக்குகளில் செலுத்துவதாக கூறப்பட்டு வந்த நிலையில் ‘இந்த மெசேஜை ஷேர் செய்தால்’ என்ற ரீதியிலான போலி மேசேஜ்கள் உலா வந்தன.

தொடர்ந்து பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, புல்வாமா தாக்குதல் போன்ற தேசிய அளவிலான உற்று நோக்கப்பட்ட பிரச்சினைகளின் போதும் இதுபோன்ற போலியான ஃபார்வேர்டு மேசேஜுகள் பல பரப்பப்பட்டன. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் செயலியை பிரதமர் மோடி முடக்க இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

வன்முறையாளர்கள் பலர் வாட்ஸ் அப் மூலம் இயங்கி வருவதாகவும் அதனால் அங்கீகரிக்கப்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளை தவிர்த்து மீத கணக்குகளை முடக்கவுள்ளதாகவும் அந்த வாட்ஸ் அப் குறுந்தகவலில் கூறப்பட்டுள்ளது. தங்கள் கணக்கு முடக்கப்படாமல் இருக்க அதை 20 பேருக்கு அல்லது குழுவுக்கு ஷேர் செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்தால் வாட்ஸ் அப் நீல நிறத்தில் மாறும் என்றும், அப்படி மாறினால் கணக்கு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதை நம்பி பலர் அந்த குறுந்தகவலை 20 பேருக்கு ஷேர் செய்ய அவர்கள் மேலும் 20 பேருக்கு ஷேர் செய்ய அப்படியே இந்த போலி தகவல் சமூக வலைதளங்கள் முழுவதும் பரவியுள்ளது. இதுபோன்ற போலி தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்