ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியான இலவச அறிவிப்புகளால் இழந்துவரும் தனது சந்தை மதிப்பை மீட்டெடுக்க ஏர்டெல் நிறுவனம் போராடி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக டெலினார் நெட்வொர்க் நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய தொலைதொடர்பு சந்தையில், சமீப காலமாக நிலவி வரும் போட்டிக்கு காரணம் இலவச அறிவிப்புகளுடன் சந்தையில் களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோ.
அனைத்து சேவைகளும் இலவசம் என்பதால், ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க்குக்கு மாறியுள்ளனர்.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை சமாளிக்கும் விதமாக, பிற நெட்வொர்க் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
எனவே, இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல், டெலினார் நெட்வொர்க்கை கையகப்படுத்த முடிவுசெய்துள்ளது.
இதே போல் ஐடியா மற்றும் வோடஃபோன் நெட்வொர்க்குகள் இணைய முடிவுசெய்துள்ளன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஏர்செல் நிறுவனங்களும் இணைவதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.