காய்ந்துப்போன காவேரி, பொய்த்துப்போன வடகிழக்கு பருவமழை, வறண்டு போன நீர்நிலைகள், வானம் பார்த்த பூமியாய் தமிழகம், விவசாயிகள் மரணம் நூறைத் தொட்டும், செயல்படாத, செயலற்ற அரசு. ஆட்சி என்பது நடக்கிறதா இல்லையா? அரசு இயந்திரம் வர்தாவுக்கு பிறகு வபாத் (இறப்பு) ஆகி விட்டதா என்ன?
பரார் பரார் சசி தேவி பரார்
முதல்வர் இறந்த நாளே நீங்கள் கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை ஏற்று இருக்கலாம். பிறகு ஏன் இந்த விவாதங்கள், சந்திப்புக்கள், சசி உலா, கோனார் உரை போன்ற சசி உரை? ஆயிரத்தில் ஒருத்தியையும் ஆயிரம் அடிமைகளையும் (நன்றி: ஆனந்த விகடன்) கொண்ட ஒரு கூடாரத்தில் ஆயிரத்தில் ஒருத்தியின் அடிமைப் பெண்ணை தலைவியாக ஏற்றுக் கொண்டது வியப்பு ஒன்றும் இல்லை. வேலைக்காரிகள் நாடு ஆளலாமா? பத்தாம் கிளாஸ் முதலமைச்சர் ஆகலாமா? என்ற கேவலமான ஒரு விவாதத்திற்கு நான் வரவில்லை? தலைமை என்பது கல்வி சார்ந்தது அல்ல. ராப்ரிதேவியை விட தகுதியானவர் தான் நீங்கள்.
நாடகம் அரங்கேறும் நேரம் இது
இரண்டாம் கட்ட தலைவர்களே இல்லாத ஓர் கட்சியில் வெற்றிடம் ஏற்படும் போது சலசலப்பு ஏற்படுவது சகஜமே. ஆனால் இங்கு அந்த சலசலப்பு கேட்கவில்லை. மாறாக புதிய பண்டங்களை பெற நினைக்கும் குள்ள நரிகளின் இரைச்சல் கேட்கிறது. பெற்ற பண்டங்களை பதுக்க நினைக்கும் ஓநாய்களின் ஓலம் கேட்கிறது. தினம்தினம் ஒரு நாடகம். இந்த மந்திரிகளும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அரிதாரம் பூசிக்கொண்டு கூத்தாடி வருகின்றன.
என்ன ஆச்சு இந்த பொன்னையனுக்கும், தம்பி துரைக்கும்?
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் மந்திரி உதயகுமார் (நான் வாக்களித்த எம் MLA) வேண்டுமானால் ஆர்வக் கோளாறாய் பேசி இருக்கலாம் ஆனால் 80களில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக களம் கண்டு வெற்றிப் பெற்று பின்பு அவரால் அரவணைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செம்மலை வரிசையில் நின்று கும்மிடு போட்டு கொண்டு இருக்கிறார்.
லோக்சபாவின் துணை சபாநாயகர் தம்பி துரை டெல்லியில் தமிழ் நாட்டின் விவசாயிகளுக்கு லாபி செய்யாமல் சசிகலாவிற்காக பன்னீர் செல்வத்திடம் லாபி செய்து கொண்டிருக்கிறார். கர்நாடக வறட்சி நிதியாக மத்திய தலைமையிடம் 1782 கோடிகள் பெற இருக்கிறது, நம் தம்பிதுரை சார் டெல்லியில் பொண்டா டீ சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்.. மற்ற MP க்கள் மிக்ஸர் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள்.
முன்னாள் அவை முன்னவர், முன்னாள் சட்ட அமைச்சர், அதிமுக வின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பொன்னையன் தன் வேஸ்டியில் விழுந்த மண்ணைத் தட்டிக் கொண்டு இருக்கிறார்.
மன்னார்குடி மாபியாவால் பலமுறை அவமானப்படுத்தப்பட்ட செங்கோட்டையன் சசிதான் வரணும் என்கிறார். இவர்கள் யாரும் மக்களின் நிலை, மக்களின் விமர்சனங்களை அறியாதவர்களா என்ன? குடல் வேகுது பயிர் கருக்குது, உங்களுக்கு என்ன சசிகலா பிள்ளை தமிழ் கேட்குதா?
மேடவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரின் பண மதிப்பிற்கு எதிரானப் போராட்டத்தில் லட்சிய பெண்மணிகளின் பெண்மையை, தாய்மையின் அடையாளத்தை இழிவுபடுத்திய காவல்துறைக்கு பொறுப்பு ஏற்று நடத்த இந்த அரசு தவறி விட்டது.
விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கும் போது ஏன்னம்மா சசிகலா! இந்த கோரஸ் சாங். இழவு வீட்டில் ஹாப்பி போர்த் டே சாங் வேணாம்மா! மாவட்ட செயலர்களுடன் வீதி உலா, யாரை நம்ப வைக்க இந்த முயற்சிகள்?, மோடி மிரட்டுகிறாரா? சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு கனவில் வருகிறதா? பயம் கொள்ளாதே! அடிமைகளின் குரல்களுக்கு செவி சாய்க்காதே! குறிப்பாக உன்னைச் சுற்றி சுழலும் கரண்களை நம்பாதேமா சசி. முன்பு ஆந்திராவில் NT ராமாராவ் இந்திராவை எதிர்த்துக் களம் கண்டு வெற்றிப்பெற்ற சரித்திரம் நடராஜனிடம் கேள்!
எண்ணற்றப் பிரச்னைகள், காவிரி மேலாண்மை, ஜல்லிக்கட்டு, தொடரும் விவசாயிகள் மரணம் என தொடரும் சோகம். மக்கள், சசிகலா வந்தார், சென்றார் என்று இல்லாமல் சசிகலா களம் கண்டார் வென்றார் என்று சொல்வதில் தான் சரித்திரம் இருக்கிறது. காலம் சிலருக்கே வழங்கும் கஜானா சாவியை உனக்கு வழங்கி இருக்கிறது. புத்திசாலியாக நடத்துக்கொள்! இல்லையேல் புத்திசாலிகள் உன் இடத்தைப் பறித்து கொள்வார்கள் என் பிரிய சசி மகளே!
இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர்
Sumai244@gmail.com