கடந்த இரு மாதங்களாக கிரிக்கெட் உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு முடிவுதான். 36 வயதாகும் அவர் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
ஏனென்றால் அவரின் உடல்தகுதிக்குக் குறைந்தது இன்னும் 4 ஆண்டுகளாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கலாம். கோலி ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முன்பாகவே இதுபற்றி அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கசிந்தன. அப்போது அவரிடம் பலரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது. பிசிசிஐ அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்காததன் காரணமாகதான் அவர் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் இல்லாமலும் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் கலக்கி வருவதுதான் இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயம்.
இந்நிலையில் ஐசிசி நடுவர் அனில் சௌத்ரி கோலி பற்றி பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அதில் “எதிரணியினர் கோலியைக் கண்டு அஞ்சுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் களத்துக்குள் வந்தாலே பாதி அணியினர் அவர் மேல்தான் கவனம் செலுத்துவார்கள். அவர் இருக்கும் போது எதிரணிக்குக் கூடுதல் அழுத்தம் உருவாகும்” எனக் கூறியுள்ளார்.