ஆசியக் கோப்பைத் தொடர் தொடங்கியதில் இருந்தே இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் முறைத்துக் கொண்டபடி நடந்துகொண்டனர். போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர் இந்திய வீரர்கள். பாகிஸ்தான் வீரர்கள் சிலரின் செயல்கள் அருவருக்கத்தக்கதாகவும், கோபமூட்டுவதாகவும் இருந்தன. இதற்காக அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
அதே போல இறுதி போட்டி வெற்றிக்குப் பின்னர் பாகிஸ்தான் அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோஷின் நக்வி கையால் கோப்பையை வாங்க மாட்டோம் என இந்திய அணி முடிவெடுத்ததால் கோப்பை இல்லாமல் இந்திய அணி வெற்றியைக் கொண்டாடியது. அதே போல பாகிஸ்தான் அணிக் கேப்டன் சல்மான் அலி ஆஹாவும் ரவி சாஸ்திரியிடம் போட்டிக்குப் பிந்தைய உரையாடலில் கலந்துகொள்ள மறுத்தார்.
இப்படி இரு அணி வீரர்களும் விளையாட்டில் அரசியலை நுழைத்தது குறித்து சையத் கிர்மாணி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “இப்போது கிரிக்கெட் விளையாடப்படுகிறதைப் பார்த்தால் அது ஜெண்டில்மேன்களின் விளையாட்டைப் போல இல்லை. அரசியல் நடக்கிறது மைதானத்தில். அதை நினைத்தால் மன வேதனையாகதான் உள்ளது. இரு அணி வீரர்களும் திமிராக நடந்துகொண்டனர். விளையாட்டில் அரசியல் புகக்கூடாது. அதை விட்டு வெளியே வாருங்கள்” எனக் கூறியுள்ளார்.