கேரளாவின் நான்கு முக்கிய விமான நிலையங்களிலிருந்தும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் பெரிய அளவில் ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல்கள், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளன. இந்த விவகாரம் குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கேம்ப்பெல் வில்சனுக்கு கடிதம் எழுதியுள்ளதாக சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சசி தரூர் தனது கடிதத்தில், "ஊடகங்களில் பரவலாக வெளியாகும் தகவல்களின்படி, அக்டோபர் இறுதி முதல் மார்ச் மாதம் வரை திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய விமான நிலையங்களிலிருந்து கணிசமான விமானங்கள் திரும்ப பெறப்படுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏர் இந்தியாவின் இந்த சேவை குறைப்பு, வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் ஊழியர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடும்பத்தினருக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று சசி தரூர் எச்சரித்துள்ளார். மேலும், இது வர்த்தகம் மற்றும் சுற்றுலாவையும் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.