நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை மிக எளிதாக வீழ்த்தியது பஞ்சாப் அணி. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் நிக்கோலஸ் பூரன் 44 ரன்களும், ஆயுஷ் பதோனி 41 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் ரிஷப் பண்ட் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 ரன்கள் மட்டுமே சேர்த்து அவுட்டானார்.
அதன் பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 17 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டியது. அந்த அணியில் பிரப்சிம்ரான் சிங் சிறப்பாக விளையாடி 69 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தார்.இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணி.
போட்டி முடிந்ததும் பேசிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் “இந்த சீசனில் எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான். வீரர்கள் அனைவரும் அவர்களின் பொறுப்பை அறிந்து விளையாடினர். அனைவரும் தங்கள் முழுத் திறமையையும் வெளிக்காட்டினர். போட்டிக்கு முன்பாக நாங்கள் ஆலோசித்ததை எல்லாம் களத்தில் செயல்படுத்தினோம்” எனக் கூறியுள்ளார்.