கடந்த பல சீசன்களாக தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெங்களூர் அணி, இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரையிலான 11 போட்டிகளில் 8 போட்டிகளை வென்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இம்முறை அந்த அணியின் வெற்றிக்குக் காரணமாக பார்க்கப்படுவது அனைத்து வீரர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளிப்பதுதான். கோலியை மட்டுமே நம்பி இருக்காமல் இளம் வீரர்கள் பலரும் தங்கள் ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
அதனால் இந்த முறை அந்த அணிக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என யூகிக்கப்படும் நிலையில், தற்போது அந்த அணிக்கு அடுத்தடுத்துப் பெரும் பின்னடைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. ஒரு வார ஒத்திவைப்பதற்குப் பிறகு தற்போது ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் ஆர் சி பி அணி கொல்கத்தாவுடன் விளையாட இருந்த போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் ஆர் சி பி அணி 17 புள்ளிகளோடு ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.
ஆர் சி பி அணியில் விளையாடி வந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த லுங்கி இங்கிடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பயிற்சிக்காக தென்னாப்பிரிக்கா செல்ல வுள்ளதால் அவருக்குப் பதில் ஜிம்பாப்வே வீரர் முஸாராபானியை ஆர் சி பி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஆர் சி பி அணியில் உள்ள ஜோஷ் ஹேசில்வுட் தோள்பட்டைக் காயம் காரணமாக விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளதால் முஸாராபானி இனிவரும் போட்டிகளில் ஆடும் லெவனில் விளையாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.