பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

Prasanth K

திங்கள், 14 ஜூலை 2025 (11:42 IST)

ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மொஹித் கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2ஆவது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாகத் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில், வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணியும், ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் புகுந்தது.

 

வில்லியனூர் அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். மொஹித் காலே 28 ரன்களில் வெளியேறினார். அதன் பின்னர் பானு ஆனந்த் மற்றும் அமன் கான் இருவரும் வலுவான பாட்னர்ஷிப் அமைத்து 2ஆவது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தனர். பின்னர், பானு ஆனந்த் 50 பந்துகளில் (9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) 84 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதேபோல் அமன் கான் 48 பந்துகளில் (6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) 69 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

 

பின்னர் களமிறங்கிய ஆகாஷ் போகுஜண்டே அதிரடியாக ஆடி, 6 பந்துகளில் (1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) 23 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் வில்லியனூர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. ஊசுடு அக்கார்ட் அணி தரப்பில் அதிகப்பட்சமாக கிருஷ்ணா பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

இதனையடுத்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியினர், சரியான பார்ட்னர்ஷிப் அமைக்கத் தவறினார். இதனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தது. ஸ்ரீதர் ராஜூ (14), கார்த்திகேயன் ஜெயசுந்தரம் (0), ஜஷ்வந்த் ஸ்ரீராம் (37), சிதக் சிங் (7) என அடுத்தடுத்து வெளியேறினர்.

 

புனீத் திரிபாதி மற்றும் கிருஷ்ணா பாண்டே இருவரும் ஓரளவு நிலைத்து நின்று ஆடினர். பின்னர், புனீத் திரிபாதி 23 பந்துகளில் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) 42 ரன்கள் எடுத்தும், கிருஷ்ணா பாண்டே 15 பந்துகளில் (3 சிக்ஸர்கள்) 37 ரன்களும் எடுத்து வெளியேறினர். இறுதியில் ஊசுடு அணி, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் எடுத்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 84 ரன்கள் எடுத்த வில்லியனூர் அணி வீரர் பானு ஆனந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

நாளை செவ்வாய்க்கிழமை (15-07-25) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. மதியம் 02.00 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில், ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணியும், காரைக்கால் நைட்ஸ் அணியும் மோதவுள்ளன. அதேபோல், மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியும், ஜெனித் யானம் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்