ஊசுடு அக்கார்ட் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2ஆவது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாகத் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில், ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியும், ஜெனித் யானம் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் புகுந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. முதல் 13 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஊசுடு அணி, அடுத்த 8 ஓவர்களில் 83 ரன்களை குவித்தது. அந்த அணியில் சிறப்பாக ஆடிய கிருஷ்ணா பாண்டே 28 பந்துகளில் (5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) 61 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
மற்றொரு வீரர் நிதின் பிரணாவ் 35 ரன்களும், ஜஷ்வந்த் ஸ்ரீராம் 29 ரன்களும் எடுத்தனர். ஜெனித் யானம் ராயல்ஸ் அணி தரப்பில், சந்தீப் பாஸ்வான் மற்றும் பிரணாய் சிங் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜெனித் யானம் ராயல்ஸ் அணியினர் பவர்பிளே ஓவர்களில் 60 ரன்கள் எடுத்தனர். கடைசி 10 ஓவர்களில் 90 ரன்கள் தேவைப்பட்டது. இதற்கிடையில் வேதாந்த் பரத்வாஜ் 34 பந்துகளில் அரைசதம் கடந்தார். பின்னர் 42 பந்துகளில் (5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) 59 ரன்கள் எடுத்து வெளியேறினார். வேதாந்த் பரத்வாஜ் தொடர்ந்து 3 அரைசதம் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது. இறுதியில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. தருண் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார்.
இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெனித் யானம் அணி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. ஜெனித் யானம் அணி வீரர் வேதாந்த் பரத்வாஜ் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.