இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

Prasanth K

ஞாயிறு, 6 ஜூலை 2025 (12:39 IST)

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீராம் கேப்பிடல் வழங்கும், பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2ஆவது ஆண்டு கிரிக்கெட் திருவிழா, சீகம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது. அன்று நடைபெறும் தொடக்கப் போட்டியில், உசுடு அக்கார்ட் வாரியர்ஸ் மற்றும் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணிகள் பங்கேற்கின்றன. 

 

2ஆவது சீசன் ஜூலை 6ஆம் தேதி தொடங்கி, ஜூலை 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சீசனில் 6 அணிகள் பங்கேற்று 34 போட்டிகளில் விளையாட உள்ளன. புதுச்சேரி, காரைக்கால், யனாம் மற்றும் மஹே ஆகிய பகுதிகளை சேர்ந்த வீரர்கள் தங்களது திறமையை காட்டவுள்ளனர். 

 

கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற மஹே மேகலோ ஸ்ட்ரைக்கர்ஸ், இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய, வில்லியனூர் மொஹித் கிங்ஸ் மற்றும், காரைக்கால் நைட்ஸ், ஜெனித் யனாம் ராயல்ஸ் ஆகிய அணிகளும் தொடரில் பங்கேற்கின்றன. 

 

இது குறித்து கூறியுள்ள மஹே மேகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனும், அறிமுக வீரருமான ஸ்ரீ கிரண், ”கடந்த ஆண்டு எந்த மாதிரியான அணுகுமுறையை கையாண்டு, வெற்றிவாகை சூடினோமோ, அதே போன்று இந்த ஆண்டும் தன்னம்பிக்கையுடன் களமிறங்குவோம்” என்றார். 

 

இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோதவுள்ளன. அதில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள், பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். 

 

தொடக்க சீசனில், அமன் ஹக்கிம் கான் 511 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அடில் அயூப் தண்டா 21 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஃபாபிட் அஹமது தொடர் நாயகனாக திகழ்ந்தார். 

 

“புதுச்சேரி கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை பிபிஎல் (PPL) அளித்து வருகிறது. நேரலை மூலமும் பொதுமக்கள் முன்னிலையிலும் விளையாடுவதற்கான தளத்தை உருவாக்கி உள்ளது” என்று பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கத் தலைவர் பி.தாமோதரன் தெரிவித்துள்ளார். 

 

பாண்டிச்சேரி பிரிமியர் லீக் தலைவர் எஸ்.மகேஷ் கூறுகையில், “இந்த தொடரில் ஒவ்வொரு அணியிலும் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த திறமையான வீரர்கள் பங்கேற்பதால், போட்டியின் தரம் உயர்வதோடு, புதுச்சேரி கிரிக்கெட்டின் அந்தஸ்தும் உயர்ந்து வருகிறது” என்றார். 

தொடரின் அனைத்துப் போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேல் (Star Sports Khel) மற்றும் ஃபேன்கோட் (Fancode) ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படுகிறது. 

 

“புதுச்சேரி கிரிக்கெட்டின் தரத்தை மேம்படுத்துவதும், உயர்ந்த அங்கீகாரத்தை பெறுவதும், பெருமைப்படுத்துவதும் தான் பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் குறிக்கோள்” என்று முதன்மை செயல் அதிகாரி மயங்க் மேத்தா தெரிவித்துள்ளார். 

 

இன்று நடைபெறவுள்ள போட்டியை, ஸ்ரீராம் குழும அதிகாரி திரு.ராஜேஷ் சந்திரமௌலி தொடங்கி வைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்