ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இதுதான்… ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து!

புதன், 8 நவம்பர் 2023 (07:05 IST)
ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று மும்பையில் நடந்த போட்டி, இந்த உலகக் கோப்பையின் மறக்க முடியாத ஒரு போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் சேர்த்து வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்த போட்டியில் ஆஸி அணியின் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்கள் சேர்த்து நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸை ஆடி ஆஸி அணியை வெற்றிப்பெற வைத்தார். இந்த இன்னிங்ஸில் அவருக்கு துணையாக நின்று ஒத்துழைத்தார் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்.

போட்டி முடிந்ததும் பேசிய அவர் “இன்று நான் கண்ட இன்னிங்சை எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியும் என தெரியவில்லை. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ். எதிர்காலத்தில் மக்கள் சொல்வார்கள். இந்த போட்டி நடைபெற்ற போது நான் அந்த மைதானத்தில் இருந்தேன் என்று.  தோல்வியின் விளிம்பில் நாங்கள் இருந்த போது கூட அவர் ஒரு திட்டத்தோடு விளையாடினார்.  அவருக்கு தசைபிடிப்பு ஏற்பட்ட போது அவரை பெவிலியனுக்கு அனுப்பிவிடலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் மேக்ஸ்வெல் கடைசி வரை களத்தில் இருப்பேன் எனக் கூறிவிட்டார்” என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்