இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார்.
சுழற் பந்து வீச்சு ஆல் ரவுண்டனான மொயீன் அலி இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளிலும், 138 ஒரு நாள் போட்டிகளிலும், 92 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 68 டெஸ்ட் போட்டிகளில் 24 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். 138 ஒரு நாள் போட்டிகளில் 116 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். 92 டி20 போட்டிகளில் 51 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
அவர் இங்கிலாந்துக்காக 6678 ரன்கள், 8 சதங்கள், 28 அரைசதங்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் ஓய்வு பெற முடிவு செய்தார். தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய மொயீன் அலி, “எனக்கு 37 வயதாகிறது, இந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை.
நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இப்போது நேரம் அடுத்த தலைமுறைக்காக வந்துள்ளது, இது சரியான நேரம் என்று நான் உணர்ந்தேன். அதனால், எனது பங்கை அளிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று மொயீன் அலி அறிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான வீரராக திகழ்ந்து வரும் மொயின் அலி ஐ.பி.எல். தொடரில் 67 போட்டிகளில் ஆடி 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 6 அரைசதங்களுடன் 1162 ரன்கள் எடுத்துள்ளார். 2014ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மொயின் அலி கடந்த 10 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.